மஞ்சள் நிறத்தில் குடிநீர் அனுப்பட்டி மக்கள் அச்சம்

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, குடிநீர், செம்மண் கலந்தது போல் கலப்படமாக வருகிறது. மண் கலந்து வருகிறதா அல்லது கழிவுநீர், ரசாயனம் உள்ளிட்ட ஏதேனும் கலக்கிறதா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், குடிநீர் தொட்டி சுத்தமாகத்தான் உள்ளது என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மஞ்சள் நிறத்தில் தான் குடிநீர் வினியோகமானது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீரை பகுப்பாய்வு செய்து, என்ன பிரச்னை என்று மக்களுக்கு விளக்க வேண்டும்,' என்றனர்.