சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்

கெய்ரோ: சூடான் நாட்டில், 2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், ராணுவத்திற்கும், துணை ராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
'யுனிசெப்' எனும், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கடந்த 2024க்கு பின், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப்படையினரால், பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 221 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 30 சதவீதம் பேர் சிறுவர்கள். அவர்களில், 16 வயது முதல், 4 - 5 வயது சிறுவர்களும் அடக்கம்.
இருதரப்பு வீரர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம் போன்றவற்றால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அட்டூழியங்களால், 61,800 குழந்தைகள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் காதரின் ரஸ்ஸல் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், போரின் ஒரு தந்திரமாக சூடானில் பின்பற்றப்படுகிறது. இதன் வாயிலாக, போரின்போது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.


