கு.க., சிறப்பு முகாமிற்கு அரசு கடிவாளம்

கம்பம்; குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கான சிறப்பு முகாம்களில் வேகம் காட்ட வேண்டாம் என குடும்ப நலத்துறைக்கு அரசு திடீர் கடிவாளம் போட்டுள்ளதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் தொகை பெருக்கம் கொரோனாவிற்கு பின் அதிகரித்தது. மேலும் 20 வயதுக்கு கீழ் திருமணம் செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் வெளியானது.

எனவே இரண்டு ஆண்டுகளாக குடும்ப நலத்துறை பெண்களுக்கு லேப்ரோஸ்கோபி மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையும், ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சையையும் தீவிரப்படுத்தி சிறப்பு முகாம்களை நடத்தினர். ஆண்கள் வாசக்டமி அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட குடும்ப நலத்துறையின் தீவிர நடவடிக்கையை பாராட்டி டாடா மெமோரியல் பவுண்டேசன் 2023 டிச., 18 ல் விருதும், ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் வழக்கியது. இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு சிறப்பு முகாம்கள் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு டாக்டர்கள் சிலர் கூறியதாவது: மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசும் சிறப்பு முகாம்கள் நடத்துவதில் வேகம் காட்ட வேண்டாம் என்றும், வழக்கம் போல் அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்களிலும் நடைபெறும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே தற்காலிகமாக குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை என்றனர்.

Advertisement