கல்லுாரி மாணவர்களுக்கு காணொளி போட்டி

கோவை:'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பெயரில், இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சிக்கான மாணவர்கள் தேர்வு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 17ம் தேதி நடக்கிறது.

இது குறித்து, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தலைப்பில், கல்லுாரி மாணவர்களிடமிருந்து ஒரு நிமிட காணொளி வரவேற்கப்படுகிறது. பிப்., 27-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி 'மை பாரத்' என்ற இணையதளம் வழியாக, பதிவுகள் பெறப்பட்டு வருகின்றன.

போட்டியை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளைக் கொண்டு நடத்தி, சிறந்த காணொளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு வழங்கி உள்ளது.

வரும் 17-ம் தேதி, கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சியில், காணொளியை வெளியிட்டு விளக்கமளிக்க வேண்டும். சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 95249 99995, -99947 47862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement