'மெட்ரோ ரயில்' வழித்தட 'சர்வே' பணிக்கு ரூ.2 கோடி
கோவை:கோவையில், 'மெட்ரோ ரயில்' இயக்கப்படும் இரு வழித்தடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு 'சர்வே' பணி மேற்கொள்ள, முதல்கட்டமாக, 2 கோடி ரூபாயை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
கோவையில், அவிநாசி ரோட்டில் 20.4 கி.மீ., சத்தி ரோட்டில் 14.4 கி.மீ., என, 34.8 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' இயக்கப்படவுள்ளது.
நீலாம்பூரில் 'டெப்போ' அமைக்க, 16 ஹெக்டேர், இரு வழித்தடங்களில் மெட்ரோ பாதை அமைக்க, 10 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கான நிலம் அளக்கும் பணியை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் செய்யவுள்ளனர்.
அவிநாசி ரோடு, சத்தி ரோடு பகுதிகளில், குடிநீர், பாதாள சாக்கடை குழாய்கள், ஒயர்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி செய்து கொடுக்கிறது.
இதற்காக, முதல்கட்ட நிதியாக, 2 கோடி ரூபாயை, மாநகராட்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''தனியார் ஏஜென்சியுடன் இணைந்து, விரைவில் சர்வே பணி மேற்கொள்ளப்படும். வருவாய்த்துறையினர் நிலம் கையகப்படுத்திக் கொடுப்பர். மெட்ரோ அலுவலகம் அமைக்க, மூன்று இடங்கள் தேர்வு செய்துள்ளோம். சப்-கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.