10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் கோர்ட்டில் சரண்
கோவை:ஈமு கோழி மோசடி வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டில் சரணடைந்தார்.
கோவையில் செயல்பட்டு வந்த, ஸ்ரீ சாரு ஈமு பார்ம் என்ற நிதி நிறுவனம், 2012ல், 16 டெபாசிட்தாரர்களிடம், 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவன உரிமையாளர் பெருந்துறையை சேர்ந்த பிரகாஷூக்கு,45, கடந்த 2021ல், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை டான்பிட் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின் போது, பிரகாஷ் கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நான்கு ஆண்டுகளாக தேடி வந்த நிலையில், கோவை டான்பிட் கோர்ட்டில், பிரகாஷ் நேற்று சரணடைந்தார். பின், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.