அறுபடை வீடு தரிசித்த மூத்த குடிமக்கள்

சென்னை:''அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் வாயிலாக, 2024- - 25ம் நிதியாண்டில், அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இது குறித்த அவரது அறிக்கை:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு, ஒரேமுறையாக மூத்த குடிமக்கள் சென்று தரிசனம் செய்திடும் வகையில், கட்டணமில்லா திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட, 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1,822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று கடலுார், விழுப்புரம். திருவண்ணாமலை, சேலம் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த, 200 மூத்த குடிமக்கள் திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து, அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement