தாம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் மாநகராட்சியாகியும் பயனில்லை என குற்றச்சாட்டு

குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, ஓம்சக்தி நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதி கழிவுநீர், கீழக்கட்டளையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும்.
அதற்கு முறையான குழாய் பதிக்கப்படவில்லை. இப்பகுதியை ஒட்டி, புத்தேரியில் இருந்து கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் கால்வாயை ஒட்டி, சேகரிப்பு மையம் கட்டியுள்ளனர்.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த சேகரிப்பு மையத்தில் நிரம்பியதும், மோட்டார் வாயிலாக இறைத்து, அதை ஒட்டிச்செல்லும் கால்வாயில் அப்படியே விடுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயும் பரவுகிறது.
அதனால், பாதாள சாக்கடை கழிவை ஏரி கால்வாயில் விடாமல், தனியாக குழாய் அமைத்து, கீழ்க்கட்டளை பம்பிங் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதற்காக, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் இருந்து, ஓம்சக்தி நகருக்கு செல்லும் சாலையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முழுமையாக பதித்து சேகரிப்பு மையத்துடன் இணைக்கவில்லை. மூன்று மாதங்கள் ஆகியும், அப்பணியை அப்படியே விட்டு விட்டனர். இதனால், வழக்கம் போல், மழைநீர் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவு கலக்கப்படுகிறது.
இது குறித்து, ஓம்சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
இப்பகுதியை, மாநகராட்சி நிர்வாகம் ஏதோ ஒரு காரணத்திற்காக புறக்கணித்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவை அப்படியே கலக்கின்றனர்.
அதற்காக தனியாக குழாய் அமைக்கும் பணியை, பாதியிலேயே நிறுத்தி விட்டனர். நகராட்சி அமைச்சர் முதல், மூன்றாவது மண்டல அதிகாரிகள் வரை, எத்தனையோ முறை மனு கொடுத்தும், அவர்கள் நேரில் ஆய்வு செய்தும், வேண்டும் என்றே புறக்கணக்கின்றனர்.
நாங்களும் தான் வரி செலுத்துகிறோம். தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வசிப்பதற்கு பதில், வேறு இடத்தில் இருந்தால், அனைத்து வசதிகளும் கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.