மக்கள் மருந்தக திட்ட வாரவிழா சிறந்த பெண்கள் கவுரவிப்பு

கீழ்ப்பாக்கம்,:பிரதம மந்திரியின் மக்கள் மருந்தக திட்டத்தின், வாரவிழாவை முன்னிட்டு, முன்னுதாரணமாக வாழும் சிறந்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திட்டத்தின், ஏழாம் ஆண்டின் வார விழாவை, 'ஜன் அவுஷதி திவாஸ்' என்ற பெயரில், சென்னையில் கொண்டாடப்படு வருகிறது.
அதன் ஒருபகுதியான, மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி, புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள மக்கள் மருந்தகம் சார்பில், அதேபகுதியில் சேவா பாரத் கட்டடத்தில், நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், பெண்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. சுயதொழில் செய்து, பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழும் நான்கு பேருக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பேச்சாளர் ரவிகுமார், பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சியாளர் செல்வி மோகன்ராஜ் ஆகியோர் பெண்கள் எவ்வாறு தொழில் மற்றும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை குறித்து பேசி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்வில், மக்கள் மருந்தகம் உரிமையாளர் லாவண்யா சங்கரி உள்ளிட்டோர் இருந்தனர். நேற்று முன்தினம், கோடம்பாக்கம் பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று, மதுரவாயல் அருகில் உள்ள ஏ.சி.எஸ்., கல்லுாரியில் கருத்தரங்கம் நடக்க உள்ளது.