பஸ்களில் காட்சி பொருளான 'மின் விசிறி' வெயில் தாக்கத்தால் ஓட்டுநர்கள் அவதி

1

சென்னை: பெரும்பாலான அரசு பஸ்களில், ஓட்டுநரின் தலைக்கு மேலே பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறி, காட்சிப் பொருளாக மாறிவிட்டது. இதனால், வெப்பத்தை சமாளிக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து, பஸ் ஓட்டுநர்கள் ஓரளவுக்கு தப்பித்து கொள்ள, கடந்த ஆண்டு அரசு பஸ்களில், டிரைவர் இருக்கைக்கு மேல் பகுதியில், 'மின் விசிறி' வசதி ஏற்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக சென்னையில், 1,000க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களில் ஏற்படுத்தப்பட்டது.

அடுத்து, பிற போக்குவரத்துக் கழகங்களில், நுாற்றுக்கணக்கான பஸ்களில், ஓட்டுநர்களுக்கு மின் விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டது. ஓராண்டு கடந்த நிலையில், பெரும்பாலான பஸ்களில், மின் விசிறிகள் பழுதடைந்து, காட்சிப் பொருளாக இருக்கின்றன.

சில பஸ்களில், மின் விசிறி பழுதடைந்ததால், அவற்றை நீக்கி விட்டனர். மின் விசிறி இல்லாததால், பஸ் ஓட்டுநர்கள் வெயில் தாக்கத்தில் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி விட்டது. கடந்த ஆண்டு, ஓட்டுநர் இருக்கைக்கு மேற்பகுதியில், மின் விசிறி பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இது, ஓட்டுநர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இந்த மின் விசிறிகளை தொடர்ந்து பராமரிக்காததால், பழுதடைந்து விட்டன.

பெரும்பாலான பஸ்களில், மின் விசிறிகள் நீக்கப்பட்டு விட்டன. சில பஸ்களில் வெறும் காட்சிப் பொருளாக இருக்கின்றன. சில ஓட்டுநர்கள் தங்கள் சொந்த செலவில், அதை சரி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், புதிய மின் விசிறிகளை பொருத்தினால், ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் ஓட்டுநர்களின் புகார் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்படும்' என்றனர்.

Advertisement