திருச்சி - யாழ்ப்பாணம் விமானம் மார்ச் 30ல் இண்டிகோ துவக்கம்

சென்னை:பயணியரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் வகையில், இண்டிகோ விமான நிறுவனம், திருச்சி - யாழ்ப்பாணம் இடையேயான, நேரடி விமான சேவையை, வரும் 30ம் தேதி துவங்க உள்ளது.

இலங்கை தமிழர்களின் முக்கிய வாழ்விடமாக யாழ்ப்பாணம் உள்ளது. அங்குள்ள தமிழ் மக்கள், மருத்துவம், சுற்றுலா உட்பட, பல்வேறு காரணங்களுக்காக, தமிழகம் வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு சென்னையில் இருந்து, இண்டிகோ நிறுவனம், விமான சேவை வழங்கி வருகிறது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தில், சிறிய ரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும் என்பதால், ஏ.டி.ஆர்.,72 வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னைக்கு அடுத்தப்படியாக, திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளும், சமூக வலைதளத்தில் வலியுறுத்தின.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான, நேரடி விமான சேவையை, மார்ச் 30ம் தேதி முதல், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் துவக்குகிறது.

திருச்சியில் இருந்து தினசரி மதியம் 12:55 மணிக்கு புறப்படும் விமானம், பகல் 1:55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3:50 மணிக்கு திருச்சி வந்தடையும்.

இந்த வழித்தடத்தில், ஏ.டி.ஆர்.,72 வகை சிறிய விமானங்கள் இயக்கப்பட உள்ளன. விமான கட்டணம் 7,190 ரூபாயில் இருந்து துவங்குகிறது. கூடுதல் விபரங்களை www.goindigo.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement