குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்!

17


தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. விண்வெளி திட்டங்களில் தொடர்ந்து இஸ்ரோ வெற்றிக்கொடி நாட்டுவதால் பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.
இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது.
அதன் அடிப்படையில், காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் குலசேகரன்பட்டினம் தேர்வானது.

இதற்காக, குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், 2,230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 05) பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே நாளில் ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

Advertisement