கள்ளக்காதலரின் ஜாமின் மனு தள்ளுபடி

உடுப்பி:காதலியின் கணவரை கொலை செய்த, கள்ளக்காதலரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உடுப்பி, கார்கலாவின், அஜேகாரின் மர்னே கிராமத்தைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணா, 44. இவரது மனைவி பிரதிமா, 37. இவருக்கு திலீப் ஹெக்டே, 28, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

பிரதிமா, திலீப் ஹெக்டேவுடன் சேர்ந்து, பால கிருஷ்ணாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து வந்தார்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட பால கிருஷ்ணா, கடந்த அக்டோபர் 20ம் தேதி உயிரிழந்தார்.

இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனையில் பாலகிருஷ்ணாவுக்கு, ஸ்லோ பாய்சன் கொடுத்தது தெரிந்தது.

அதன்பின் பிரதிமா, திலீப் ஹெக்டே கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு ஜாமின் அளிக்கும்படி, கார்கலாவின் இரண்டாவது, கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் திலீப் ஹெக்டே மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனு மீது நேற்று விசாரணை நடந்தபோது, ஜாமின் வழங்க அரசு தரப்பு வக்கீல், ஆட்சேபம் தெரிவித்தார்.

வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி சமிவுல்லா, 'மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவருக்கு ஜாமின் அளிக்க முடியாது' என, கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

ஜாமின் கோரி பிரதிமாவும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், விசாரணை, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement