தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா

4

ஹைதராபாத்: ''தவறுதலாக, அதிகளவு துாக்க மாத்திரையை எடுத்துக்கொண்டதால் மயங்கி விழுந்தேன்; நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை,'' என, பிரபல பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார்.


@1brதமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக இருப்பவர் கல்பனா, 44. தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நிசாம்பத் நகரில் வசித்து வருகிறார். இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து நேற்று முன்தினம் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அங்கு டாக்டர்கள், கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து, கண் விழித்த கல்பனாவிடம், போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதில் அவர் கூறியதாவது: கடந்த 4ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஹைதராபாதுக்கு வந்தேன். துாக்கமின்மை காரணமாக, முதலில் எட்டு துாக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்.



இதைத்தொடர்ந்து, கூடுதலாக 10 துாக்க மாத்திரைகளை உட்கொண்டேன். டாக்டர் பரிந்துரைத்த அளவை விட, அதிக துாக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்ததால், வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பின்னணி பாடகி கல்பனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அவரது குடும்பத்தினர் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் உறுதி செய்தனர்.

Advertisement