ஒகேனக்கல் சென்றவர்கள் கார் லாரியில் மோதி மூவர் பலி

மகேந்திரமங்கலம்:பாலக்கோடு அருகே நின்ற லாரி மீது, கார் மோதியதில் மூன்று பேர் பலியாகினர்.-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அலசநத்தத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி முனிகிருஷ்ணன், 50.

அதே பகுதியைச் சேர்ந்த இவரின் நண்பர்கள் சீனிவாசன், 47, பசுவராஜ், 38, மஞ்சுநாத், 47, சந்திரப்பா, 50, ஆகியோருடன், 'இன்னோவா' காரில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வந்து, மாலையில் ஓசூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை முனிகிருஷ்ணன் ஓட்டினார். தர்மபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோட்டை அடுத்த ஜிட்டாண்டஹள்ளி பிரிவு சாலை அருகே இரவு, 7:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதி எதிர்புற சாலையில் நின்ற சரக்கு லாரி மீதும் மோதியது.

இதில் கார் இடிபாடுகளில் சிக்கிய முனி கிருஷ்ணன் பலியான நிலையில், மற்ற நால்வரும் படுகாயமடைந்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் நால்வரையும் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பசுவராஜ் இறந்தார். பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட சீனிவாசனும் இறந்தார். மஞ்சுநாத் மற்றும் சந்திரப்பா தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement