'ஜல் ஜீவன்' திட்டத்திற்கான குடிநீர் தொட்டிகள் சேதம்...குற்றச்சாட்டு : ஊராட்சிகளில் இணைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு

1

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகின்றன. ஊராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்பு வழங்காமலேயே, குடிநீர் இணைப்பு வழங்கியது போல், அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில், தலா மூன்று வீதம் 1,578 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

ஊராட்சிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப 10,000 முதல் 30,000 லிட்டர் கொள்ளளவில் இத்தொட்டிகள் அமைக்கப்பட்டன.

கோடிக்கணக்கான ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் செயல்பாட்டுக்கு வராமலும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமலும், கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால், கட்டி முடித்து பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதால், குடிநீர் தொட்டிகளின் அடிப்பகுதி பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 'ஜல் ஜீவன்' திட்டத்தில், வீடுகள்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் வகையில், தேசிய அளவில் இரண்டாவது மாவட்டமாக, திருவள்ளூர் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், ஊராட்சிகளில் முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பல இடங்களில் தொட்டிகள் சேதமடைந்துள்ளன; வீடுகள் தோறும் இணைப்பு வழங்கப்படாத நிலை உள்ளது. இந்நிலையில், வீட்டு வரி வசூலிக்கும் போது, குடிநீர் கட்டணமும் வசூலிக்க வேண்டுமென, அதிகாரிகள் கறார் காட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளில் ஆய்வு செய்து, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் கட்டடணம் வசூலிக்க அறிவுறுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகத்துார் பகுதிவாசிகள் கூறியதாவது:

எங்கள் ஊராட்சியில், ஜல் ஜீவன் திட்டத்திற்காக, பல நாட்களாக பணி செய்து வந்தனர். ஆனால் தற்போது வரை, எந்த வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.50 மாத கட்டணம்



தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில், 88.38 சதவீத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால், மாதந்தோறும் தலா, 50 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

- குடிநீர் வாரிய அதிகாரி.

ஆய்வு நடக்கிறது



மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்ட சில இடங்களில் மின் இணைப்பு வழங்காததால் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், ஊராட்சி பகுதிகளில் பெயரளவிற்கு ஆய்வு செய்துவிட்டு, பணிகள் நிறைவடைந்ததாக கூறி 'பில்'களை பாஸ் செய்து விட்டு சென்று விட்டனர். தற்போது, குடிநீர் இணைப்பு வழங்காத ஊராட்சிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இணைப்பு வழங்கி, குடிநீர் சீராக வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி,

திருவள்ளூர்.

Advertisement