திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை

சென்னை: சென்னையில் 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நாய்களுக்கான எரிமயானம் இன்னமும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.நகரில் உள்ள கண்ணம்பேட்டையில் பொதுமக்களின் வளர்ப்பு பிராணியான நாய்களின் எரிமயானம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால், இத்தனை நாட்களாகியும் அந்த எரிமயானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த எரிமயானம் திறக்கப்படாததால், ப்ளூ கிராஸூக்கு சொந்தமான எரிமயானத்தில் ரூ.2,500 கொடுத்து நாய்களின் சடலத்தை தகனம் செய்ய வேண்டியுள்ளதாகவும், இதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான இந்த எரிமயானத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனவிலங்கு மாநில வாரிய உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "சென்னை மாநகராட்சி நாய்களின் சடலங்களை எரியூட்டுவது மற்றும் இறுதிச்சடங்கிற்கான கட்டணத்தை இதுவரையில் நிர்ணயம் செய்யவில்லை. அதை நிர்ணயித்து விட்டால், விரைவில் எரியூட்டு மயானம் திறக்கப்படும்," என்றார்.
ஆனால், எரிமயானத்தின் வெளிப்பகுதிகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. திறந்தவெளியில் மனிதக்கழிவுகள், குப்பை கூலங்களாக காட்சியளிக்கின்றன. தி.நகரில் உள்ள நாய்களுக்கான இடுகாடு நிறைந்து விட்டன. தற்போது வரையில் பெரும்பாலான உரிமையாளர்கள், நாய்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து, அதன் பிறப்பு, இறப்பு தினங்களை அனுசரித்து வருகின்றனர்.
சென்னையில் உரிமம் பெற்ற 25 ஆயிரம் நாய்களும், 1.8 லட்சம் தெருநாய்களும் இருப்பதால், இன்னும் நிறைய இடுகாடுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, வடசென்னையில் புளியந்தோப்பு, ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களுக்கான இடுகாடுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனிடையே, "எதிர்வரும் ஆணைய கூட்டத்தில் கட்டணத்தை நிர்ணயம் செய்து, தி.நகரில் உள்ள எரிமயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


மேலும்
-
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
-
ரவுடி படப்பை குணா கைது
-
செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா
-
தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
-
மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!
-
காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!