எதிர்பார்ப்பு; பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம்; பணிகள் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம்

ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு அரசின் விவசாய பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அறிவிப்புகள் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தமிழகத்தில் விவசாயம், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாய பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.


தற்போது செயற்கை உரங்கள் பயன்பாடு அதிகமாக உள்ளதால் உடலுக்கு நன்மை தரக்கூடிய விவசாய விளை பொருட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.


இந்த நிலையை போக்கிட இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்த அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. விவசாய விளை பொருள்களுக்கு எப்போதும் நிரந்தர விலை கிடைப்பதில்லை.


விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விளை பொருட்களுக்கு நல்ல விலை இருக்கும் நாட்களில் போதிய விளைச்சல் இல்லாமல் போகிறது.


விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கப்படும் விளை பொருட்கள் நுகர்வோர்களான மக்களிடம் சென்று சேரும் போது பல மடங்கு அதிகரித்து விற்கப்படுகிறது.


100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் 100 நாள் வேலைத்திட்டத்தை வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement