கோடை விவசாயத்தில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

திருப்புவனம்: திருப்புவனம் சுற்று வட்டார கண்மாய், கிணறுகளில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தும் விவசாயிகள் கோடை விவசாய பணிகளில் ஆர்வம் காட்டவில்லை.

திருப்புவனத்தில் அறுவடைக்கு பின் விவசாயிகள் கோடை விவசாயம் செய்வது வழக்கம், கண்மாயில் நீர் இருந்தாலும் கிணற்று பாசன விவசாயிகள் ஏ.டி.டீ., ஐ.ஆர்., 20, கோ 50 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிடுவார்கள், இந்தாண்டு பிப்ரவரி முதல் அறுவடை நடந்து வரும் நிலையில் அறுவடை செய்த விவசாயிகள் கோடை விவசாயத்திற்கான எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. பூவந்தி பகுதியில் மட்டும் உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மற்ற பகுதிகளில் விவசாயிகள் கோடையில் நெல் சாகுபடி செய்ய எந்த வித முயற்சியும் செய்யவில்லை.

விவசாயிகள் கூறுகையில்: கோடை விவசாயத்திற்கு மானிய விலையில் விதை நெல் கிடைப்பதில்லை. 30 கிலோ எடை கொண்ட ஏ.டி.டீ., ரக நெல் ஆயிரத்து 260 ரூபாய், 50 கிலோ எடை கொண்ட என்.எல்.ஆர்., ரக நெல் வேளாண் துறை மூலம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கோடை விவசாயத்திற்கு மானியவிலையில் விதை நெல் விற்பனை செய்யப்படுவது இல்லை. காலம் பருவத்தில் விற்பனை செய்து மீதம் இருந்தால் விற்பனை செய்வார்கள், மேலும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது.

தற்போது நெல் சாகுபடி தொடங்கினால் பன்றிகள் தொல்லை அதிகம் வர வாய்ப்புண்டு, கருவேல மர காடுகளில் பதுங்கியுள்ள பன்றிகள் இரவு நேரத்தில் உணவு , தண்ணீர் தேடி வயல்களுக்கு வரும், கடன் வாங்கி பன்றியிடம் உழைப்பு அனைத்தையும் இழக்க வேண்டும், பன்றிகளை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத போது கடன் வாங்கி விவசாயம் செய்து என்ன பயன் எனவே நெல் சாகுபடி செய்யவே இல்லை, என்றனர்.

Advertisement