புதுச்சேரியில் விரைவில் 25 இ-பஸ் சேவை... சுற்றுச்சூழலை காத்திட நடவடிக்கை

1

புதுச்சேரி: புதுச்சேரி: புதுச்சேரியில் பெருகி வரும் காற்று மாசுபாட்டை தவிர்த்திட தனியாருடன் இணைந்து, அரசு சார்பில் இம்மாத இறுதிக்குள்25 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.


நாட்டில் பெருகி வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இது மனித குலத்திற்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. இதற்கு தீர்வு காணவும், காற்று மாசை குறைக்க பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழமை மாறாமல் கட்டடங்களை புதுப்பித்தல், கல்வி, சுகாதாரம், பாதாள சாக்கடை சீரமைப்பு என பல திட்டங்கள் உள்ளது. அதில் உள்ள போக்குவரத்து பிரிவின் கீழ் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் புகையில்லாத சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொது போக்குவரத்து வசதியை மேற்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டது.


அதன்படி, காற்று மாசு குறைக்கும் இ-பஸ் (பேட்டரியில் இயங்கும் எலட்ரிக்கல் பஸ்கள்) இயக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 இ -பஸ்கள் வாங்கவும், அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இ-பஸ்கள் வாங்குவதற்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 23 கோடி, போக்குவரத்து துறைக்கு வழங்கப்பட்டது.


ரூ. 4 கோடி மதிப்பில் இ-பஸ்களுக்கான பாஸ்ட் சார்ஜ் மற்றும் ஸ்டேன்டர்டு ஜார்ஜ் என்ற சார்ஜிங் ஸ்டேஷன், பழைய பஸ் நிலையம், தாவரவியல் பூங்கா எதிரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


போக்குவரத்து துறை இ-பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் விட்டு இறுதி செய்துள்ளது. அதன்படி, 10 ஏ.சி., இ-பஸ்கள் உட்பட 25 இ-பஸ்கள் அரசு தனியார் பங்களிப்புடன் வாங்கப்பட உள்ளது.


புதிய இ-பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அதில் டிக்கெட் கலெக் ஷன் பணியை மட்டும் அரசு ஊழியர்கள் செய்வர்.


இந்த பஸ்கள் 1 கி.மீ., இயக்கினால், பஸ் இயக்கும் நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு அதற்கான தொகை கொடுத்து விடும். அதன்படி ஏ.சி., பஸ் ஒரு கி.மீ., துாரம் இயங்க 63.8 ரூபாயும், ஏ.சி., வசதி இல்லாத பஸ் ஒரு கி.மீ., துாரம் இயங்கினால் 62 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த 25 இ-பஸ்களும் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.


போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்; ைஹதராபாத் நிறுவனம் இ-பஸ்களை தயாரித்து புதுச்சேரியில் இயக்க உள்ளது. பஸ் கட்டுமான பணிகள் முடிந்து இம்மாத இறுதிக்குள் இ-பஸ்கள் புதுச்சேரியில் இயங்கும். சார்ஜிங் ஸ்டேஷன் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது. சார்ஜிங் ஸ்டேஷன் மின் கட்டணங்களை பஸ் இயக்கும் தனியார் நிறுவனம் மின்துறைக்கு செலுத்தும்.


இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியின் மூலம் மேலும் 75 இ-பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இயக்க ஒரு கி.மீ.,க்கு மத்திய அரசு ரூ. 23 முதல் ரூ. 25 வரை மானியம் அளிக்கும். அதனால் மாநில அரசுக்கு செலவினம் மிச்சமாகும் என்றனர்.

Advertisement