இரண்டு ஏழை மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி தரலாம்!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு:

தமிழகத்தில் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயதை 55ல் இருந்து 58 ஆக உயர்த்தியதற்கு, நான் வாதாடி வெற்றி பெற்ற ஒரு வழக்கு தான் காரணம்.

எப்படி நிலவுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு கட்டங்கள் உள்ளனவோ, அதேபோல் மனிதனுக்கும் வளர்ச்சி பருவம், தேயும் பருவம் உண்டு.

புராண கதையில் வரும் மார்க்கண்டேயனை தவிர வேறு எவரும் முதுமையை வென்றதில்லை. புத்தர் கூறியது போல, ஒவ்வொரு பிறப்பிற்கும் எல்லை இறப்பு தான்; அதை தவிர்க்க முடியாது.

தவிர்க்க முடியாதவற்றை வரவேற்பதன் வாயிலாக, தளர்ச்சி அடைவது குறையும். முதியவர்களை மதிக்க வேண்டும். பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்பது சமூக நீதியாக இருப்பினும், அதை இன்று சட்டத்தின் வாயிலாக நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.

கடந்த 2007ல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சட்டம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட பின் தான், இன்று பலரும் அச்சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரியான கோட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுப்பது அதிகமாகியுள்ளது.

ஏற்கனவே, தம் வாரிசுகளுக்கு எழுதி வைத்த சொத்துக்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு, பெற்றோரே மனுக்கள் கொடுப்பதை பார்த்து பரிதாபமாக உள்ளது.

மரியாதை என்பது மற்றவர்களிடம் எதிர்பார்த்து கிடைப்பதல்ல. ராவணன் சபையில் அனுமன் தனக்கே உண்டாக்கி கொண்ட ஆசனம் போன்றதுதான் மரியாதை.

'சீனியர் சிட்டிசன்' என்ற அடைமொழியால் சில சலுகைகளை வேண்டுமானால் பெறலாம். ஆனால், நாம் ஏற்கனவே அனுபவித்த அதிகார தோரணையில் உலா வர முயற்சி செய்வது தவறு. மேலும், வேலை பார்ப்பவர்களை விட ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை தான் இன்று அதிகம்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியங்களும், சலுகைகளும் பணியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் செலவினத்தை விட அதிகரித்து வருகிறது.

அதே சமயம், 58 - 60 வயதில் ஓய்வு பெறுபவர்கள் இன்னும், 10 ஆண்டுகள் நிச்சயமாக வேலை செய்ய முடியும். எனவே, அரசு தரும் ஓய்வூதியத்தை பணிக்கான ஊதியம் என்று கருதி, சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஏழை மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித் தருவதை கடமையாகக் கருத வேண்டும். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement