50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு

1


மதுரை: தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையில் செயலி வழி பதிவேற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால் விடுதி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு உரிய உணவுக் கட்டணம் வழங்குவது இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் சொந்த பணத்தை செலவிட்டு அதிருப்தியான காப்பாளர்கள், மாநில அளவில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இத்துறையில் 1331 பள்ளி, கல்லுாரி, தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் விடுதிகள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1400, கல்லுாரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 என அரசு சார்பில் உணவு கட்டணம் வழங்கப்படுகிறது. அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மானிய விலையிலும், இதர பொருட்களை வெளிச் சந்தைகள், கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது.



நடப்பாண்டில் விடுதிகளில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் தகுதி உள்ள மாணவர்களை ஜூனில் சேர்க்க துறை இயக்குநர் உத்தரவிட்டார். அப்போது சேர்க்கையான மாணவர்களுக்கு விடுதி காப்பாளர்கள் உணவு வழங்கி வருகின்றனர். ஜூலையில் சேர்க்கைக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.


இதையடுத்து ஆகஸ்ட்டில் 'நல்லோசை' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் விபரம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு, நிர்வாக சிக்கல்கள் காரணமாக பதிவேற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதில் பதிவாகாத மாணவர்களுக்கு உணவு கட்டணம் நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மாணவர்கள் விடுபட்டனர். அவர்களுக்கு உணவு கட்டணம் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உணவுகட்டணமாக, காப்பாளர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு, அதை திரும்ப பெற முடியாமல் தவிக்கின்றனர்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: காப்பாளர்கள் சொந்த பணத்தை 6 மாதங்களுக்கும் மேலாக செலவிடுகின்றனர். ஒரு காப்பாளர் செலவு செய்த உணவுக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் (ரீஇம்பர்ஸ்மென்ட்) என்றால், அதுதொடர்பான பட்டியல் தயாரிக்க, தனி தாசில்தாரிடம் ஒப்புதல் பெற, மாவட்ட அலுவலக கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற, கருவூலம் வரை பணம் (லஞ்சம்) கொடுக்க வேண்டியுள்ளது. இதுதவிர மாதாந்திர 'விசிட்' வரும் அதிகாரிகளையும் 'கவனிக்க' வேண்டும். அதன் பின் தான் உணவு கட்டணம் கிடைக்கும்.


இதற்கிடையே 'நல்லோசை' செயலி பதிவேற்றத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. ஆண்கள் விடுதிகளை பெண்களாகவும், பெண்கள் விடுதிகளை ஆண்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டது.
இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகபட்டினம் உட்பட பல மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இன்னும் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் விடுதியில் இருந்தும், அவர்களுக்கான உணவுக் கட்டணம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுதி பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ.5000ம் வேறு பணிகளுக்கு செலவிட உத்தரவிடப்படுவதால் கடும் மனஉளைச்சலில் உள்ளோம். இதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றனர்.





விடுதிகளை முடக்கும் செயலா?

இவ்விடுதிகளுக்கே வராத ஆளும்கட்சி நாளிதழ்களுக்கான சந்தா பணம் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. இணைப்புகளில் பல பிரச்னைகள் இருப்பினும் பி.எஸ்.எல்.என்., நிறுவனத்திற்கு மாதம் ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது. 'நல்லோசை' செயலியை பயன்படுத்துவதற்காக 'அவுட்சோர்ஸ்' மூலம் பணியாற்றுவோருக்கு மாதம் சம்பளம் ரூ. 10 லட்சம் என தாராளமாக செலவிடப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் முடக்கப்படுகிறது. இது இத்துறையை முடக்கும் செயலா என காப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement