வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்

சென்னை: குடிநீர் வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கும் அதிரடி நடவடிக்கையை குடிநீர் வாரியம் துவக்கியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் நேற்று, இரண்டு நிறுவனங்களுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 13.85 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். இதன் வாயிலாக ஆண்டிற்கு, 1,025 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். கடந்த 2024 -- 25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 552 கோடி ரூபாய் வசூலானது. இது, 2023 -- 24 முதல் அரையாண்டைவிட, 20 கோடி ரூபாய் குறைவு.
இதனால், நடப்பு நிதியாண்டில் நிர்ணயித்த வரி வருவாயை அதிரடியாக வசூலிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, வரியை முறையாக செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் வழங்கி, சீல் வைப்பது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையை துவங்கியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், 111வது வார்டு, அண்ணா சாலையில், 12 ஆண்டுகளாக வரி செலுத்தாமல், ஏழு லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருந்த, தலைக்கவசம் விற்பனை கடைக்கு நேற்று, சீல் வைக்கப்பட்டது.
அதேபோல், 25 ஆண்டுகளாக, 6.22 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்த, பிரின்ஸ் டவரில் இயங்கி வந்த, 'லிபார்ட் பைனான்ஸ்' நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வணிகம் மற்றும் அரசு துறை சார்ந்த கட்டடங்களில், வரி நிலுவை அதிகம் உள்ளது. இதில், பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல், குடிநீர் சேவை பெற்று வரும் கட்டடங்கள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளோம்.
இந்த கட்டடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்குகிறோம். அப்படியும் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு, சீல் வைத்து வருகிறோம். சீல் வைத்த பிறகும் வரி செலுத்தாமல் இருந்தால், ஜப்தி நடவடிகையில் இறங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!
-
காமராஜர் பெயரை நீக்கி விட்டு காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? சீமான் கொந்தளிப்பு
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
-
சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
-
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; தி.மு.க., அரசை கேட்கிறார் ராமதாஸ்