செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

9

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுப்புவதற்கு ராணுவ விமானங்களை பயன்படுத்தப்பட்டது. இதற்கு செலவு அதிகம் ஆவதால், அந்த விமானத்தை பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்கா அதிபராக கடந்த ஜன., மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதன் பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு மெக்சிகோ, கொலம்பியா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த விமானத்தை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறின. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், ராணுவ விமானத்தை பயன்படுத்த அதிக செலவு ஏற்பட்டது. இந்த விமானத்தில் குறைந்த நபர்களே ஏற்ற முடிவதுடன், அவை நீண்ட தூரம் செல்வதால் செலவும் அதிகமாக இருந்தது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டு உள்ளது.

அரசு தகவல்களின்படி, அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது எனக்கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நீட்டிக்கப்படலாம் அல்லது நிரந்தரமாக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

Advertisement