பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து வேன், பொருட்கள் எரிந்து சேதம்

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஸ்டாண்டர்ட் பாலிமர்ஸ் பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மினி வேன் உள்ளிட்டவை எரிந்து சேதமாயின.

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜாலிங்கம் மகன் சுரேஷ் 53,ஆவரம்பட்டி இனாம் செட்டிகுளத்தில் ஸ்டாண்டர்ட் பாலிமர்ஸ் என்ற பெயரில் பிளாஸ்டிக் ஓவன் சாக்கு பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தற்போது சாக்கு பைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டு இயந்திரங்கள், பிளாஸ்டிக் தளவாடப்பொருட்கள் வாங்கி விற்கும் குடோனாக பயன்படுத்தி வருகிறார்.

நேற்றிரவு 8:00 மணியளவில் இந்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இயந்திரங்கள், 14க்கும் மேற்பட்ட அறைகளில் இருந்த மூலப்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், மினி வேன் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பிறகு முழு சேத விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement