அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் அரண்வாயல் வாசிகள்

அரண்வாயல்:திருவூர் அடுத்துள்ளது அரண்வாயல் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள திருமழிசை - திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த குடிநீர் தொட்டி கடந்த 2012-13ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்திட்ட கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீல் சீரமைக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதாதல் குடிநீர் தொட்டி மேல்புறம் ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது .

இதனால் குடிநீர் தொட்டி அருகே வசித்து வரும் பகுதிவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பகுதிவாசிகள், மாணர்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்து குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரண்வாயல் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ஊராட்சியில் நியாய விலைக்கடை அருகே பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 2000ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

அதன்பின் இந்த குடிநீர் போதிய பராமரிப்பில்லாததால் தற்போது மிகவும் பழுதடைந்து பயன்பாடில்லாமல் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இது அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பகுதிவாசிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடை அருகே அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement