திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிப்பட்டு செல்கின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலம் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மலைப்பாதை இரு வழிச்சாலையாக உள்ளதால், கோவில் நிர்வாகம் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் நடுவில் இரும்பு தடுப்பு அமைத்து, ஒரு வழியாக வாகனங்கள் செல்வதற்கும், மற்றொரு வழியாக வாகனங்கள் கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

சில மாதங்களாக கார், ஆட்டோ , இரு சக்கர வாகன ஓட்டிகள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, இறங்கும் வழியாக சில வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நடந்தது வந்தது.

மூன்று தினங்களுக்கு முன் மலைக்கோவிலில் இருந்து திருமணம் முடிந்த புதுமணதம்பதி உள்பட நால்வர் ஆட்டோவில் மலைப்பாதையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு ஆட்டோ மலைக்கோவிலுக்கு செல்வதற்கு கீழே இறங்கும் வழியாக சென்றதால், ஆட்டோ ஓட்டுனர் மோதாமல் தவிர்க்க வாகனத்தை திரும்பிய போது, ஆட்டோ கட்டுப்பாடு இழந்து, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று மலைப்பாதை ஏறும் நுழைவு பகுதி மற்றும் கீழே இறங்கும் நுழைவு பகுதி ஆகிய இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், ஆட்டோ, இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கீழே இறங்கும் பாதையில் ஏறிச் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்கு தொடரப்படும் என எச்சரித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

எனவே மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் கட்டாயம் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement