பட்டரைபெரும்புதுார் கோவிலில் சுரங்கப்பாதை இல்லை: தொல்லியியல் துறை அதிகாரி தகவல்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரு அறைகள் மட்டும் உள்ளன. சுரங்கப்பாதை எதுவும் இல்லையென ஆய்வில் தெரிய வந்ததாக தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்.,18 ம் தேதி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் பட்டரைபெரும்புதூரில் அமைந்துள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலை சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோவிலுக்குள் சுரங்கப்பாதை இருப்பதாக வெளிவந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவில் கருவறைக்குள் ஒன்றரை மீட்டர் அகலம், 7 அடி ஆழம் கொண்ட சுரங்கம் போன்று ஒரு பகுதி இருப்பதை கண்டறிந்தனர். சுரங்கப்பாதையை ஆய்வு செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று காலை சுப்பிரமணிய கோவில் சுரங்கப்பாதைக்குள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ லோகநாதன் ஆய்வு செய்தார்.

பின் அவர் கூறியதாவது:

கோவிலில் தரைத்தளத்தின் உள்ளே 10 அடி உயரத்தில் 8 அடி அகலத்தில் 2 அறைகள் மட்டும் உள்ளன. இந்த அறைகள், கோவில் சிலைகள், நகைகள், ஆவணங்கள் பாதுகாக்க உருவாக்கி இருக்கலாம். அறைக்குள் எந்த வித பொருட்களும் இல்லை. சுரங்கப்பாதை செல்வதற்கான வழித்தடம் எதுவும் உருவாக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவஞானம், என்.எச். 205 தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா மற்றும் வருவாய் துறையினர் திருவள்ளூர் தாலுகா போலீசார் உடனிருந்தனர்.

Advertisement