அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
விழுப்புரம்: பக்கமேடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் நடந்தது.
வளனுார் அடுத்த பக்கமேடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மாசி மாத மயான கொள்ளை உற்சவம், தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம், கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம், 1ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவில் குளக்கரையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவர், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின், தேரில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில், மாங்கல்யம், புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை, பக்தர்கள் அங்காளம்மனுக்கு காணிக்கையாக அளித்து, சிறப்பு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்காளம்மன், காளி, பாவாடைராயன் போன்ற சுவாமி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள், பக்தர்களும் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.