ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,

வால்பாறை : “ஹிந்தி மொழி கற்பதில் தவறில்லை,” என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., - எம்.பி., ஈஸ்வரசாமி பேசினார்.
மத்திய அரசு ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் விதமாகவே, மும்மொழிக்கொள்கையை செயல்படுத்த முனைப்பு காட்டுகிறது என, தி.மு.க., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
உதவித்தொகை
இதற்காக, மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க.,வினர் மாநிலம் முழுதும் பேசி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா, நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
விழாவில் பங்கேற்று ஈஸ்வரசாமி பேசியதாவது: தமிழக அரசின் சார்பில், குழந்தைகள் முதல் முதியவர் வரை பயன்பெறும் வகையில், மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடும், சேவை மனப்பான்மையோடும் கல்வி கற்றுத் தரும் பணியாளர்களை மனதார பாராட்ட வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
திணிப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை, இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதை கட்டாயப்படுத்தி திணிக்கும் போதுதான் எதிர்க்கின்றனர். தமிழ் மொழியை ஒழிக்கவே, மத்திய அரசு மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியை திணிக்கிறது. ஹிந்தி மொழி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
