அரசியல் கட்சிகள் கூட்டம்: மாற்று இடத்தில் நடத்தப்படுமா

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் தடை விதிப்பதோடு வேறு இடங்களில் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் எதிபார்க்கின்றனர்.

அருப்புக்கோட்டையில் நாடார் சிவன் கோயில் பகுதி, இந்தியன் வங்கி முன்பு, புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

அண்ணாதுரை சிலை பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் வாகன போக்குவரத்து மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். முக்கிய தினங்களில் கட்சிகளின் தலைவர்கள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க வருவர்.

சில நேரங்களில் இங்கு ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் போன்றவை நடக்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோன்று பந்தல்குடி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி முன்பு கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த ரோடு குறுகிய ரோடு ஆக இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடக்கின்ற போது, வங்கிக்கு வருபவர்களுக்கும் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையூறாகவே உள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர். இது போன்ற முக்கியமான இடங்களில் கட்சியினர் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு போலீசார் தடை விதிப்பதோடு, போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாத சொக்கலிங்கபுரம் நேருமைதானம், வெல்லக்கோட்டை, காந்திநகர் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்த கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Advertisement