சதுரகிரி மலைக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

4

மதுரை: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபட, பக்தர்களை தினமும் காலை 6 முதல் 10 மணி வரை வனத்துறை சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்க வேண்டும். இரவில் யாரேனும் மலையில் தங்கினால், கைது செய்ய வேண்டும்.

பாலிதீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தடை செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சுந்தரபாண்டியம் சடையாண்டி 2023ல் தாக்கல் செய்த மனுவில், 'நவராத்திரியை ஒட்டி அக்கோவிலில் 10 நாட்கள் வழிபட மற்றும் மூன்று நாட்கள் இரவில் தங்க அனுமதிக்க வனத்துறை, அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கேட்டிருந்தார்.

அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தமிழக அரசு தரப்பில், 'குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் இரவில் கோவிலில் தங்க அனுமதித்தால், மற்றவர்களும் அத்தகைய உரிமை கோர வழிவகுக்கும். தங்க அனுமதித்தால், சமையல் செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டது.



நீதிபதி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை அரசியலமைப்பு பாதுகாக்கிறது. இந்த உரிமையில் தலையிடுவது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறும் மனுதாரரின் வாதம் ஏற்புடையது. சதுரகிரி மலைக்கு புனித யாத்திரை செல்வது பக்தர்களுக்கு பாக்கியம் மற்றும் பெருமைக்குரிய சந்தர்ப்பமாகும்.


பொதுநலன் கருதி வனத்துறையுடன் கலந்தாலோசித்து, நியாயமான கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை கீழ்க்கண்ட விபரங்களை உள்ளடக்கி அறநிலையத் துறை வெளியிடும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. தினமும் பக்தர்களை காலை 6:00 முதல் 10:00 மணி வரை வனத்துறை சோதனைச்சாவடி வழியாக அனுமதிக்க வேண்டும்


தரிசனத்திற்குப் பின் பக்தர்கள் மாலை 4:00 மணிக்குள் பாதுகாப்பாக மலையடிவாரத்தை அடைய ஏதுவாக, காலை 10:00 மணிக்கு நுழைவு வாயிலை கண்டிப்பாக மூட வேண்டும்நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மக்கள் எத்தனை பேர் சென்று வருகின்றனர் என்பதை கணக்கிட வேண்டும். யாரேனும் அனுமதியின்றி மலையில் இரவில் தங்கினால், வனத்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம்



பாலிதீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தடை செய்ய வேண்டும். வனத்துறை சோதனைச் சாவடியில் பக்தர்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது


வனப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் அதிக வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களை தாணிப்பாறை, கோவிலுக்குச் செல்லும் வழியில் நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement