தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி17 ஆண்டு காத்திருப்புக்கு விடியல் கிடைக்குமா?எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள்
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி17 ஆண்டு காத்திருப்புக்கு விடியல் கிடைக்குமா?எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள்
அரூர்:சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் நிலையம் அமைக்க பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாக, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 17 ஆண்டுகால காத்திருப்புக்கு விடியல் கிடைக்குமா என, கரும்பு விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 90 கோடி ரூபாய் மதிப்பில், இணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயிகளின் பங்களிப்பாக, 10 சதவீத தொகையான, 9 கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்து, கடந்த, 2007 - 08ல், எவ்வித முன்னறிவிப்பின்றி ஆலைக்கு கரும்பு அனுப்பிய 7,182 விவசாயிகளிடம் இருந்து, டன் ஒன்றுக்கு, 90 ரூபாய் வீதம், 4.50 கோடி ரூபாய் பெறப்பட்டது. கடந்த, 2008ல் ஆலையில், இணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்கி, 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், 2011ல் ஆட்சி மாற்றத்தால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அப்பணியை ஒப்பந்ததாரர், 45 மாதங்களுக்குள் முடிக்க விதி முறை இருந்தும், பணியை முடிக்கவில்லை.
தொடர்ந்து, 2017ல், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில், பொருட்கள் எரிந்து நாசமாயின. தற்போது, மழை மற்றும் வெயிலில் காய்ந்து, இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. ஆலையில், 35,000க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் இருந்தபோதிலும், 7,182 விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த, 4.50 கோடி ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியும், சர்க்கரை துறை இயக்குனர், அமைச்சர் என, பலரிடம் மனு அளித்தும், இதுவரை பணம் வழங்கப்படவில்லை.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், அ.தி.மு.க., ஆட்சியில், இணை மின் நிலையம் அமைக்கும் பணி, 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இணைமின் நிலையம் பணி துவங்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி துவங்கப்படாததுடன், விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட பணமும் வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் தங்களின், 17 ஆண்டு கால காத்திருப்புக்கு விடியல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
-
காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு