கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.21 சரிவு


கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.21 சரிவு


நாமக்கல்:தமிழகத்தில் கறிக்கோழி கொள்முதல் விலையை, பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) தினமும் நிர்ணயிக்கிறது. கடந்த, 1ல் கொள்முதல் விலை கிலோ, 102 ரூபாயாக இருந்தது. நேற்று முன்தினம் கிலோவுக்கு, 21 ரூபாய் சரிந்து, 86 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: ஐதராபாத் மண்டலத்தில், கறிக்கோழி ஒரு கிலோ, 50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை காரணம் காட்டி தமிழகத்தில் கொள்முதல் விலையில் இருந்து, 42 ரூபாய் குறைத்து, தமிழக வியாபாரிகள் கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி, கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர் தள்ளப்பட்டுள்ளனர். பண்ணையில், 65 ரூபாய்க்கு கோழிகளை பிடித்து, சில்லரை விலையில் மூன்று மடங்கு அதிகரித்து கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். உற்பத்தி செலவை காட்டிலும் குறைத்து
கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில், 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement