இந்திய வம்சாவளி மாணவி மாயம்; டொமினிகன் குடியரசில் தேடுதல் தீவிரம்

1


வாஷிங்டன்: டொமினிகன் குடியரசுக்கு சுற்றுலா சென்றபோது காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷா கோனாங்கியை தேடி வருகின்றனர்.


இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷா கோனாங்கி (வயது 20) அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் படித்து வந்தார். இவர், நண்பர்களுடன் டொமினிகன் குடியரசில் சுற்றுலா சென்றார். புன்டா கானாவில் உள்ள ரியு ரெப்யூப்ளிகா ஹோட்டலில் கடற்கரைக்கு சென்றுள்ளார். பிகினி உடையில் கடற்கரையில் நடந்து சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார்.



இதையடுத்து, டொமினிகன் குடியரசின் அதிகாரிகள் சுதிக்ஷா கோனாங்கியை தேடி வருகின்றனர். தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோனாங்கி உடன் சென்ற மாணவிகளிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவல்படி கடல் பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது.


இது குறித்து கோனாங்கியின் தந்தை சுப்பராயுடு கூறியதாவது: இதுவரை டொமினிகன் குடியரசில் உள்ள பல அதிகாரிகள் நீரில் தேடினர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் தேடுதல் பணி நடந்து வருகிறது. அவர்கள் அருகில் உள்ள புதர்கள், மரங்களிலும் தேடினர். அதிகாரிகள் ஒரே இடத்தில் பல முறை சென்று தேடிய பிறகும் கிடைக்கவில்லை.


எனது மகள் மிகவும் நல்லவர். அவள் லட்சியவாதி. அவர் மருத்துவ துறையில் சிறந்து விளங்க விரும்பினார். அவள் மார்ச் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நண்பர்களுடன் ரிசார்ட்டில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோழிகள் அனைவரும் திரும்பி வந்துவிட்டார்கள். எனது மகள் மட்டும் காணாமல் போய்விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement