குல்பூஷண் ஜாதவ் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை

பலுசிஸ்தான்: இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், மேற்காசிய நாடான ஈரானின் சபாஹரில் ஒரு தொழிலை நடத்தி வந்தார். 2016ல், அவரை கடத்திய மர்ம கும்பல், ஈரான்- - பாக்., எல்லை அருகே, பாக்., ராணுவத்திடம் ஒப்படைத்தது.
தொடர்ந்து, உளவுபார்த்த குற்றச்சாட்டில், குல்பூஷண் ஜாதவுக்கு பாக்., ராணுவ நீதிமன்றம் 2017ல் துாக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் நம் நாடு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவின் துாக்கு தண்டனையை 2019ல் நிறுத்தி வைத்தது. தற்போது அவர், பாக்., சிறையில் உள்ளார்.
ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை கடத்த, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, அந்நாட்டின் மத போதகர் முப்தி ஷா மிர் உதவி செய்தார். இந்த கடத்தலுக்கு அவர் மூளையாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் டர்பத் என்ற பகுதியில், கடந்த 7ம் தேதி இரவு, தொழுகைக்கு பின் மசூதியில் இருந்து வெளியேறிய மத போதகர் முப்தி ஷா மிரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜாமியத் உலமா அமைப்பு உறுப்பினரான முப்தி ஷா மிர், ஐ.எஸ்.ஐ.,க்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்; ஆயுதம் மற்றும் மனித கடத்தலில் ஈடுபட்டார். நம் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முப்தி ஷா மிர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்