கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!

புதுடில்லி: கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., எம்.பி.,க்களுக்கும் கடும் விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக தி.மு.க., எம்.பி., கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதைத் தவிர, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது, வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது மத்திய அரசின் முக்கிய அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) துவங்கியது. லோக்சபா கூடியதும் புதிய கல்வி கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி தொடர்பாக தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது.
தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் கூறியதாவது: தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
தமிழகத்தில் கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது ஏற்க முடியாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, என்றார்.
பதிலடி
இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.
கல்வியில் அரசியல்
மாணவர்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ஹிமாச்சல் ஆகிய மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கின்றன. தவறான தகவல்களை தெரிவிப்பதோடு மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைக்கின்றது. மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது.
யூ-டர்ன்
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பது தொடர்பாக எம்.பி.,க்கள், தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் சந்தித்தனர். கடந்த மார்ச் 15ல் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட தமிழக அரசு தற்போது யூ-டர்ன் அடிக்கிறது.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் சேர தமிழக முதல்வர் சம்மதித்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்; யார் அந்த சூப்பர் முதல்வர் என்று எம்.பி., கனிமொழி கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி பதில்
இதற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியதாவது: மும்மொழிக் கொள்கையை தமிழகம் நிச்சயம் ஏற்காது. தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என்ற தர்மேந்திர பிரதானின் பேச்சு வேதனை அளிக்கிறது.
கல்வி நிதியை விடுக்க வலியுறுத்தி தான் மத்திய கல்வி துறை அமைச்சரை தமிழக எம்.பி.,க்கள் உடன் சந்தித்தேன். தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்னைகள் இருக்கிறது. முழுமையாக ஏற்க முடியாது என தெளிவாக கூறினோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், எனது வார்த்தைகள் தமிழக எம்.பி.,க்களை காயப்படுத்தி இருந்தால் அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பிரதான் பேட்டி
இது குறித்து பார்லிமென்ட் வளாகத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மும்மொழிக்கொள்கை குறித்து தமிழக அரசுக்கு புரிதல் இல்லையே தவிர, மற்றபடி எந்த கொள்கையும் இல்லை எல்லாம் அரசியல் தான். வட மாநிலங்களில் பலர் மும்மொழியை தெரிந்து வைத்துள்ளனர்.
3வது மொழி
எனது மகள் கூட அவரது பள்ளியில் 3வது மொழியாக மராத்தி படித்து வருகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க மறுக்கிறோம் என எந்த காரணத்தையும் தமிழக அரசு கூறவில்லை. நாகரீகமற்றவர்கள் என கூறிய வார்த்தையை திரும்ப பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அமளி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, லோக்சபாவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.
ராஜ்யசபா
அதேபோல், காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடந்தது. தொகுதி மறுசீரமைப்பு விவாகாரத்தில் விவாதம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறி தி.மு.க., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.









மேலும்
-
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலையின் மூன்று கேள்விகள்!
-
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பார்லியில் விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
-
ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு; சுகாதாரத்துறை உத்தரவு
-
ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
-
கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்; வந்த வழியிலே மீண்டும் திரும்பியது விமானம்!
-
மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!