மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதி கடமை முடிப்பதற்கு கண்டனம்: சீமான்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மார்ச் 6ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போல முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு 143 மீனவர்களும், 2022ம் ஆண்டு 229 மீனவர்களும், 2023ம் ஆண்டு 220 மீனவர்களும், 2024ம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025ம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்?
மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழக மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா?
அகண்ட பாரதம் பேசும் பா.ஜ., காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? பார்லியில் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க., கூட்டணி, பார்லி. உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழக மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன?
எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய தி.மு.க., அரசு, கச்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?
தமிழக மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் பேரவலத்துக்கு தீர்வை காணவும் மத்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் வரும் 22ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் - தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

மேலும்
-
சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு வெயிலில் வாடும் பஸ் பயணியர்
-
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்
-
கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் கோரிக்கை
-
மக்கள் குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
-
பயறு வகை பயிர்களில் படைப்புழு வேளாண் கல்லுாரி அறிவுரை