பயறு வகை பயிர்களில் படைப்புழு வேளாண் கல்லுாரி அறிவுரை

திருவூர், திருவள்ளூர் மாவட்டம் ஒதிக்காடு பகுதியில் தக்கைப்பூண்டு, எள் மற்றும் பச்சை பயறு வகை பயிர்களில், படைப்புழு (ஸ்போடாப்டிரா லிட்டுரா) தாக்குதல் அதிகமாக உள்ளதாக வேளாண் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, திருவூர் வேளாண் அறிவியல் கல்லுாரி நெல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் வேளாண் கல்லூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
படைப்புழுக்களின் முட்டையானது பழுப்பு நிறத்தில் குவியல்களாக காணப்படும். இளம்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடையாக மாற்றும். வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தின்று அழித்து விடும்.
இளம் பச்சை நிறம் மற்றும் கருமை நிற கோடுகளுடன் காணப்படும் இந்த புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த, 2.5 ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். கூட்டுப்புழுக்களை, 2.5 ஏக்கருக்கு 10 முதல் 12 எண்ணிக்கையிலான பறவை தாங்கிகளை வைக்க வேண்டும்.
வயல் வரப்பில்ஆமணக்கு செடிகளை பயிரிட லாம். இரவில் 2.5 ஏக்கருக்கு 5 கிலோ அரிசி, 500 கிராம் வெல்லம், பியூரபின் 3ஜி ஆகியவற்றை 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, உருண்டைகளாக நஞ்சு கவர்ச்சி உணவாக வைக்க வேண்டும். இந்த உணவை கால்நடைகள் மற்றும் பிற உயிரினங்கள் உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளான 5 சதவீதம் எமமெக்டின் பென்சொயேட் எஸ்.ஜி., மருந்து 80 கிராம் அல்லது ஸ்பைனடோரம் 11.7 சதவீதம் எஸ்.சி., 168 மி., போன்ற மருந்துகளில், ஏதேனும் ஒன்றை 2.5 ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்க வேண்டுமென கேட்டு கொண்டு உள்ளனர்.