சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்

பொன்னேரி,
பொன்னேரி அடுத்த மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் 250 - 300 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, கர்ப்பிணியர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, தற்போது அதில் செயல்படுகிறது. அதேசமயம் சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. கட்டடத்தின் பின்புற வளாகம் முழுதும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அதிலிருந்து விஷ ஜந்துக்கள் அவ்வப்போது வளாகத்திற்கு வந்து செல்வதால், பணியில் உள்ள மருத்துவ குழுவினர் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைகின்றனர்.
தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் அபாயநிலை உள்ளது.
எனவே, சுகாதார நிலைய கட்டடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.