மக்கள் குறைதீர் கூட்டம் 557 பேர் மனு ஏற்பு

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று, காலை 11:00 மணிக்கு நடந்தது.
இதில், உதவித்தொகை, பட்டா, ஆக்கிரமிப்பு என, 557 பேர் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தாட்கோ எனப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் வாயிலாக சொந்த நிலம் வாங்க, 17 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனைத்தும் கள ஆய்வு மேற்கொண்டு மானியம் வழங்கப்பட்டது.
இதில், இரு பயனாளிகளுக்கு சொந்த நிலமாக்கப்பட்ட ஆவணங்களை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, மேட்டுப்பாளையம் கிராமத்தினர் அளித்த மனு:
மேட்டுப்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தில் 3,000 பேர் வசிக்கிறோம். இங்கு செல்லாத்தம்மன் கோவில் எங்களது முக்கிய வழிபாட்டு தலமாகும்.
இந்த கோவில் குளத்தில் இருந்து, ராகாளம்மன் கோவிலுக்கு அபிஷேக தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம். மேலும், ஆடி மாதம் நடக்கும் திருவிழா சமயத்தில் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம்.
இதுபோன்று நாங்கள் வழிபாடு செய்து வரும் கோவிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும், தனியார் தொழிற்சாலை அடைத்துள்ளது. எங்களது வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை அகற்றி எங்களது வழிபாட்டு உரிமையை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.