சென்னையில் 2 மாதங்களில் 11 மனைப்பிரிவு வரன்முறை

சென்னை, தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2019ல் இத்திட்டம் முடிந்தாலும், விடுபட்டவர்களுக்காக, கடந்த ஆண்டு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நகரமைப்பு விதிகளுக்கு உட்பட்டு, வரன்முறைக்கான தொழில்நுட்ப அனுமதியை அளிக்கின்றனர்.

இந்த வகையில், நடப்பு ஆண்டு ஜன., - பிப்., ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், 11 அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவடியில் - நான்கு; சோழவரம் ஒன்றியத்தில் - இரண்டு என, சென்னை மாநகராட்சி, திருநின்றவூர், தாம்பரம், திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் தலா ஒரு மனைப்பிரிவு என மொத்தம், 11 மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த விபரங்களை, வரைபடங்களுடன் சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement