ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி சாலை பணி ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கம்

ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி இடையே, 2.6 கி.மீட்டர் துார இருவழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியில் முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.

தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், தங்களின் அத்தியாவசி தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.

இப்பகுதிகளில் இருந்து, தினமும் கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை, வேலை வாய்ப்பு, பொதுப்பணி, மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள திருவள்ளூருக்கு ஏராளமானோர் செல்கின்றனர்.

அதேபோல், கல்லுாரி படிப்பு, வெளியூர் வேலைக்கு செல்பவர்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே, 26 கி.மீட்டர் துாரம் உள்ளது. இச்சாலை வழியாக தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

ரூ.20 கோடி ஒதுக்கீடு



பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 30 மீட்டர் அகலத்தில் மீடியனுடன் சாலை அமையவுள்ளது.

ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி இடையே, 2.6 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சாலை அகலப்படுத்தும் பணி துவங்கிய நிலையில், 52 மரங்கள், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்ட உள்ளன. ஆறு மாதத்தில் சாலை விரிவாக்க பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.

மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி,

திருவள்ளூர்.

Advertisement