நோட்டீஸ் நிராகரிப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடில்லி : போலி வாக்காளர் அடையாள அட்டை முதல், லோக்சபா தொகுதி மறுவரையறை வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அளிக்கப்பட்ட நோட்டீஸ் ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில், 12க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விதி, 267ன் கீழ் விவாதம் நடத்த, எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்து இருந்தன.
லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க., உறுப்பினர்களும், போலி வாக்காளர் அடையாள அட்டை குறித்து விவாதிக்க திரிணமுல் காங்., உறுப்பினர்களும் நோட்டீஸ் அளித்து இருந்தனர்.
சபை கூடியதும், இன்றைய அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவசர விஷயங்கள் குறித்து விவாதிக்க விதி எண், 267ன் கீழ் வழங்கப்பட்ட 12 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்படுவதாக ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதை, சபை முன்னவரும், மத்திய அமைச்சருமான நட்டா கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு விவாதத்தில் ஆர்வம் இல்லை. தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ, விவாதத்தில் ஈடுபடவோ அரசு விரும்பவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
எதைப் பற்றி வேண்டுமானாலும் இந்த சபையில் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதையெல்லாம் எதிர்க்கட்சியினர் படிப்பதில்லை.
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முதலில் விதிகளை படித்து விவாதம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:வாக்காளர் பட்டியல் குறித்து நாடு முழுதும் கேள்வி எழுந்துள்ளது. மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்காளர் பட்டியலை அரசு தயாரிக்கவில்லை என்றாலும், அது குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.