'முடா' முன்னாள் கமிஷனர் நடேஷுக்கு 'நோட்டீஸ்'

பெங்களூரு: 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், வீட்டுமனைகள் ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் பற்றி, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 'முடா' முன்னாள் கமிஷனர் நடேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, வாக்குமூலம் ஆகியவை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் நடேஷ் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'அமலாக்கத்துறையினர் சோதனை, நடேஷுடம் பெற்ற வாக்குமூலம் செல்லாது' என தீர்ப்பு கூறினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, அருண் ஆகியோர் அடங்கிய அமர்வில், அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது.

பிரதிவாதி ஆட்சேபனை தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்பும்படி கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஏப்ரல் 8க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement