பட்டா மாறுதலுக்கு ரூ.7,000 லஞ்சம்: திருப்பூரில் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது

திருப்பூர் : திருப்பூர் அருகே இடையபாளையத்தில் பட்டாவில் பெயர் சேர்க்க, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகியோரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வஞ்சிபாளையம் - முருகம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42. இவரது உறவினர் திருப்பூர், குமார் நகரை சேர்ந்த சாரதாமணி. இவர், சமீபத்தில், ஊத்துக்குளி தாலுகா இடையபாளையத்தில், 2.25 ஏக்கர் இடம் வாங்கியிருந்தார். அதற்கான பட்டாவில் பெயர் சேர்க்கும் பணிகளை கார்த்திகேயன் மேற்கொண்டு வந்தார். பெயர் சேர்ப்பு தொடர்பாக இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.


விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பணியை முடித்து கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் பிரபு, 44 மற்றும் அவரது உதவியாளர் கவிதா, 36, ஆகியோர், 7 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி லஞ்ச பணத்தை நேற்று மாலை அலுவலகத்தில் கொடுக்கும் போது டி.எஸ்.பி., ரவிசந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரபு மற்றும் கவிதாவை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து, இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement