மேல்சபையில் கல்வி வல்லுநர் துரைசாமிக்கு இரங்கல்

பெங்களூரு: சமீபத்தில் மறைந்த கல்வி வல்லுநர் துரைசாமிக்கு, மேல்சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேல்சபை நேற்று காலை கூடியதும், சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மறைந்த கல்வி வல்லுனரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான துரைசாமிக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார்.

பின் அவர் பேசியதாவது:

கல்வி வல்லுனர் துரைசாமி, உயர் கல்வி துறையில் பெரும் பங்கு அளித்தவர். அவரது மறைவால் ஏற்படும் துயரத்தை சமாளிக்கும் சக்தியை, அவரது குடும்பத்தினர், விசுவாசிகளுக்கு இறைவன் அளிக்கட்டும். மறைந்தவரின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் போசராஜு: முன்னாள் எம்.எல்.சி.,யும், கல்வி வல்லுனருமான துரைசாமி மறைந்த தகவல் கேட்டு, என் மனம், மிகவும் வருத்தமடைந்தது.

பா.ஜ., - ரவி: பி.இ.எஸ்., கல்வி நிறுவனத்தை துவக்கி, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி போதித்தார். அவரது இழப்பு கல்வித்துறைக்கு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு, இறைவன் மன திடத்தை அளிக்கட்டும்.

அதன்பின் துரைசாமிக்கு கவுரவம் செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement