தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகள் நீக்கம் அமைச்சர் முனியப்பா உறுதி

பெங்களூரு: ''தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகளை கண்டுபிடித்து, அவர்களை நீக்கி தகுதியான பயனாளிகளுக்கு சலுகைகள் கிடைக்க செய்வோம். இதற்காக கிராம அளவில் கமிட்டி அமைக்கப்படும்,'' என, மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் முனியப்பா கூறியதாவது:

அரசு தீவிரம்



சட்டசபை கூட்டம் முடிந்தவுடன், முதலில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்துவோம்.

அதன்பின் கிராம அளவில் கிராம கணக்காளர்கள், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உட்பட, மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம்.

தகுதியான பயனாளிகளுக்கு, அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கம். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால், தகுதியற்ற பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கலாம். இவ்விஷயத்தை அரசு தீவிரமாக கருதுகிறது.

இதற்கு முன்பு தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகளை கண்டறிந்து, கார்டுகளை மாற்ற முற்பட்டபோது, பெரும் விவாதமே ஏற்பட்டது. 99 ஏ.பி.எல்., ரேஷன்கார்டுகளை, பி.பி.எல்.,லில் சேர்த்தால் யாரும் கேள்வி எழுப்புவது இல்லை. ஆனால் ஒரே ஒரு பி.பி.எல்., கார்டை ஏ.பி.எல்.,லுக்கு மாற்றினால், பெரிய சர்ச்சையை உருவாக்குகின்றனர்.

உண்மையான பயனாளிகள், அரசின் சலுகைகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைய கூடாது என்பது, எங்களின் விருப்பம். மத்திய அரசின் விதிகளை நாங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே பி.பி.எல்., கார்டுகள் ஆய்வு செய்யப்படும்.

கமிட்டி அமைப்பு



தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகளை கண்டுபிடித்து, அவர்களை நீக்கி தகுதியான பயனாளிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க செய்வோம். இதற்காக கிராம அளவில் கமிட்டி அமைக்கப்படும், தகுதியற்றவர்களும், பி.பி.எல்., பயனாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இவர்கள் ஏ.பி.எல்.,லில் சேர்க்கப்படுவர்.

மத்திய அரசு 1.10 கோடி பயனாளிகளை மட்டுமே, பி.பி.எல்., பட்டியலில் சேர்க்க, மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. நம் மாநிலத்தில் மொத்தம் 4.50 கோடி பயனாளிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பி.பி.எல்., பட்டியலில் இருந்து 25 லட்சம் கார்டுகளை நீக்க வேண்டும்.

கார்டுகளை மாற்றும்போது, குழப்பங்கள் ஏற்படுவது சகஜம். தகுதியற்றவர்களை நீக்கி, உண்மையில் தகுதி உள்ளவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement