நீலகிரியில் லோக் அதாலத் 681 வழக்குகளுக்கு தீர்வு

ஊட்டி : நீலகிரியில் நடந்த லோக் அதாலத்தில், 681 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ஊட்டியில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமையில் 'லோக் அதாலத்' நடந்தது. மகிளா கோர்ட் நீதிபதி செந்தில் குமார், குடும்ப நல நீதிபதி லிங்கம், தலைமை குற்றவியல் நீதிபதி சசிகலா, மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளரும் சார்பு நீதியுமான பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் லோக் அதாலத் நடந்தது.

அதில், 'நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், குடும்ப பிரச்னை சம்பந்தமான வழக்குகள்,' என, 4,526 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மாவட்டத்தில், 7.6 கோடி ரூபாய் மதிப்பில், 681 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோர்ட் நிர்வாகிகள் கூறுகையில், 'லோக் அதாலத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இதில், முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும்.

இதனை வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement