ஓரின சேர்க்கை நட்புக்கான செயலியில் பழகி மோசடி செய்த இளைஞர் கைது

மதுரை : 'கிரைண்டர்' (grindr) என்ற ஓரின சேர்க்கையாளர்கள் நட்புக்கான செயலி மூலம் பழகியவரிடம் ரயிலில் சென்றபோது மயக்க மருந்து கொடுத்து அவரது அலைபேசி, மோதிரம் திருடிய இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

அலைபேசி செயலிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் கிரைண்டர் என்ற செயலி, ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் நட்புக்கானதாக உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து இளைஞர்கள் போட்டோக்களை பதிவிட்டு ஒருவருக்கொருவர் ஆன்லைனில் பழகி நேரடியாக சந்தித்து, நட்புக்கொள்கின்றனர். இந்த செயலி மூலம் இரவு நேரங்களில் இளைஞர்களை அழைத்து சந்திக்கும் சிலர், உறவில் இருக்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கு ஆசை காட்டுகின்றனர். பின் ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்கி பணம், பொருட்களை கொள்ளையிட்டு தப்புகின்றனர். இச்சம்பவங்கள் மதுரையிலும் அதிகரித்துள்ளது.

இளைஞர் கைது



தர்மபுரி குணசேகரனிடம் 34, சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் 32 , முகநுால் வழியாக நட்பாகி 'கிரைண்டர் ஆப்' மூலம் போட்டோக்களை பகிர்ந்து நட்பானார். இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து புனலுார் செல்லும் ரயிலில் ஏறி நாகர்கோவில் வரை சென்றனர். நாகர்கோவிலில் குணசேகரன் மயங்கிய நிலையில் கீழே இறக்கிவிடப்பட்டார். சுயநினைவில்லாமல் கிடந்த அவரை ரயில்வே போலீசார் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், குணசேகரனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து 2 தங்க மோதிரங்கள், அலைபேசி ஆகியவற்றை முனீஸ்வரன் கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் முனீஸ்வரனை கைது செய்தனர்.

அவர்கள் கூறுகையில், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் சந்திப்பு எனக் கூறி பலரிடம் மோசடிகள் நடக்கின்றன. பலர் மிரட்டப்பட்டுள்ளனர். ஏமாந்த இளைஞர்கள் பலர் இதுகுறித்து புகார் அளிக்க தயக்கம் காட்டுவதால் மோசடியில் ஈடுபடும் நபர்களும் அவர்களின் கைவரிசையை தொடர்கின்றனர் என்றனர்.

Advertisement